Wednesday, April 4, 2012

கிறுக்கல்

கிறுக்கல்......என்னுள் உதித்த முதல் தமிழ் வார்த்தை..எழுத வேண்டும் என தோற்றிய கணத்தில். அமெரிக்க வாழ்கை அலுத்து போக துவங்கிய நேரத்தில். தமிழில் எழுதுகிறேன்...மூன்று வருடங்களுக்கு பிறகு. இது எவ்வளவு தூரம் வரையில்? தெரியவில்லை...அநேகமாக...தமிழ் வார்த்தகளை ஆங்கிலத்தில் எழுதுவது சிரமமாக தோன்றும் வரையிலுமாக இருக்கலாம். அல்லது, ஆங்கிலத்தில் சொல்வது போல, 'passing fancy', என்னை விடும் வரையிலுமாக இருக்கலாம். இல்லையேல், ஒர்லாண்டோ சென்று இருக்கும் எனது மேனேஜர் திரும்பி வரும் வரையிலுமாக இருக்கலாம்.

எழுத்தின் மீது எனக்கு இருந்த ஆர்வம் விலகியது எப்படி? இது தான் என எதையும் உறுதியாக கூற முடியவில்லை. ஆனால், எனக்கு எழுத்தின் மீது இருந்த ஆர்வம் பற்றி கடைசியாக யாரிடம் பேசினேன் என நினைவுள்ளது.
ஒரு சராசரி மத்திய வர்க்க குடும்பத்தில்இருக்கும் அனைத்து பிரச்சனைகளோடும், கனவுகளோடும், உந்துதலோடும், B.tech முடித்துவிட்டு, 'இனி என்ன ?' என்ற கேள்வியோடு போராடிகொண்டிருந்த நேரம். நண்பர்கள் அனைவரும் கணினி துறையில் நல்ல வேளையில் அமர்ந்திருக்க, நான் மட்டும் திட்டவட்டமாக கணினி என்னுடைய துறை அல்ல என எனது பெற்றோரை சமாதான படுத்த முயற்சித்து கொண்டிருந்தேன். நிர்வாகவியல் படிப்புக்கு விண்ணப்பம் அனுப்பி கொண்டிருந்தேன்....முழு விருப்பமில்லாமல். சுமாரான சில கல்லூரிகளில் அனுமதியும் கிடைத்தது. அதிலும் மனம் விருப்பம் இல்லாமல் தத்தளித்தது. முடிவெடுப்பதில் அநேகமாக எந்த சிரமமும் இருந்ததில்லை எப்போதும். இப்பொழுது எடுக்கும் முடிவு எனது வாழ்கையை திசை திருப்பி விடும் என்று தெரிந்தபோது சற்று யோசித்தேன். பனி விலகியதும் தெரியும் பாதை போல..ஏதோ ஒன்று இந்த பணியை விரைவில் விளக்கும் என்ற நம்பிக்கையோடு காத்து இருந்தேன். உயிர் தொழில்நுட்ப துறையில் இருந்த ஆர்வம் சில வழிகளை ஆராய தூண்டியது. வேலை தரக்கூடிய மேற்படிப்பு பற்றி ஆராய ஆரம்பித்தேன் (கல்வி கடன் ஒரு பக்கம் பயம் தர தொடங்கி இருந்தது).

எல்லா வற்றிற்றிகும் மேலாக, மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் பழையபடி தலை தூக்க தொடங்கியது. அப்படி நினைத்து தான் மருத்துவ பொறியியல் துறையை படித்தேன். அனைத்து தோழிகளின் கேலிக்கும் ஆளானேன். முட்டாள், வாழ தெரியாதவள் என சில பட்டங்கள். இது என்ன புது படிப்பு என ஆச்சர்யகுறியோடு சில முகங்கள். எல்லாவற்றையும் உதாசீன படுத்திவிட்டு படிப்பை தொடர்ந்தேன். பலப்பல கேள்விகள் என் உறுதியை குலைக்க ஆரம்பித்தன. இந்தியாவில் இந்த படிப்புக்கு வேலை பெரிதாக ஒன்றும் இல்லை என்ற நிதர்சனம் புரிய ஆரம்பித்தது. உடன் படித்த அனைவரும் கணினி துறை தான் என மனதை தயார் படுத்திகொண்டிருகையில், நான் மட்டும் இந்த துறையில் மேலே செல்வது எப்படி என யோசித்து கொண்டிருந்தேன்.

நண்பர்கள் சிலர் வெளிநாடுகளில் படிக்க முயற்சித்து கொண்டிருந்தார்கள். நானும் செல்ல நினைத்தேன்...ஆனால் வீட்டில் நிலவரம் ஒன்றும் பெரிதாக இல்லை. படிப்பு செலவுகளை சமாளிக்க முடியுமா என தெரியவில்லை. அம்மா ஒரு நாள், ச'வின் ஒன்று விட்ட தம்பி ஜெர்மனியில் மேற்படிப்பை தொடர்ந்தான் என கேள்வி பட்டேன். பேசித்தான் பாரேன் என்றார். அம்மாவுக்கு என் மீது ஏதோ ஒரு நம்பிக்கை. நானும் மின்னஞ்சல் வழியாக பேச ஆரம்பித்தேன்...கே'விடம்.

முதலில், ஆச்சரியத்தோடு என்னிடம் பேச ஆரம்பித்தார். வெளிநாட்டில் படிக்க உனக்கு எப்படி தோன்றியது எனகேட்டார். பல காரணங்களை அடுக்கினேன். எனது ஆர்வத்தையும் , தயக்கத்தையும் புரிந்து கொண்டார். முழு கவனத்தையும் நுழைவு தேர்வில் செலுத்து என்றார். சொன்னதோடு மட்டுமில்லாமல், படிக்க புத்தகங்களையும் அனுப்பினார். அதற்குமேல் யோசிக்க ஒன்றுமில்லாமல், படிக்க ஆரம்பித்தேன். உடன் எங்கள் நட்பும் வளர்ந்தது. ஒரு ஆசானுக்குரிய மரியாதையோடு பழக ஆரம்பித்தேன். மெல்ல அவருக்கு என்மீது இருந்த ஆர்வம் புரிந்தது. இருபத்தியொரு வயதில் இதை பற்றி என்ன சிந்தனை என அந்த வழியில் நட்பை ஊக்க படுத்தாமல் பழகினேன். ஆனால் எனது பெற்றோரின் விருப்பமும் அவருடைய விருப்பமும் ஒன்றாகவே இருந்தது. அவருடைய அம்மாவும் இதில் விருப்பம் காட்ட ஆரம்பித்திருந்தார். அநேகமாக முடிவு செய்து விட்டார்கள் என்ற நிலையில் நானும் அதை ஏற்று கொள்ள ஆரம்பித்தேன். அப்பொழுது ஒரு முறை எழுத்தின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை அவரிடம் சொன்னேன்....அது தான் கடைசி முறையாக நான் எழுத்தை பற்றி பேசியது....

மூன்று வருடங்களுக்கு பிறகு அவரை சந்திக்க நேர்ந்தது....அவரது மனைவியுடன். மறுபடியும் கேட்டார்....எப்படி வெளிநாட்டில் படிக்கவேண்டுமென உனக்கு தோன்றியது?

கனவா அல்லது நிஜமா?

காதலில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை எனலாம். தோழிகள் காதலில் விழுந்தபோதெல்லாம், அந்தச்செய்தி கடைசியாக எட்டுவது எனக்குத்தான். இத்தனைக்கும் நான் ஒரு போதும் காதலிப்பது தவறு என யாரிடமும் கூறியதில்லை. ஒருவேளை, என்னை காதல் மக்கு என நினைத்தார்கள் போலும். எனது நெருங்கிய தோழிக்கும் இதே நிலை தான்.
இதில் நாட்டமில்லாமல் பல வருடங்கள் கழிந்தது.

எப்பொழுதோ ஒருமுறை, சிக்மன்ட் பிராய்டின் காதல் பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அவரது கருத்துப்படி, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, சிறு வயதிலிருந்தே சில விருப்பங்களை ஒரு கற்பனை உருவத்தின் மீது ஏற்றி, தனது ஆழ்மனதில் பதியவைத்து கொள்வதுண்டாம். பருவ வயதை எட்டும் பொழுது, எதிர்கொள்ளும் ஆணோ/பெண்ணோ அந்த கற்பனை உருவத்தை ஒத்து இருந்தால், அந்த ஈர்ப்பு காதலாய் தோன்றுவதுண்டாம். சிக்மன்ட் பிராய்டின் தீவிர ரசிகையான நான் இந்த கருத்தை ஆராதித்ததில் ஆச்சர்யம் இல்லைதானே?

நாட்கள் இப்படிசெல்ல, எனது ப்ரொஜெக்டின் தேவையாக, நியூ யார்க் செல்ல நேர்ந்தது. நான் தங்கி இருந்த வீட்டின் குடும்பத்தினர், குழந்தைகளை கோடை விடுமுறைக்காக 'தீம் பார்க்' அழைத்துச்சென்றனர்....உடன் என்னையும். நான் ப்ராஜெக்ட் செய்துகொண்டிருந்த நிறுவனத்திற்கு அருகில் அவர்களது உறவினர் ஒருவர் தங்கி இருக்க, என்னை அழைத்து வர அவரை ஏற்பாடு செய்திருந்தனர்.ஏதோ ஒரு காரணத்திற்காக, நான் ஒரு 45 வயதான மனிதரை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு மங்கிய வெள்ளை நிறத்தில் ஒரு கார் அலுவலகத்திற்கு எதிரில் வந்து நின்றது. ஒரு அழகிய வாலிபர் (??)இறங்கி தயங்கியவாறே எங்கே செல்வதென யோசித்து நின்றார். எதிர்புறம் நின்றிருந்த நானும் தயங்கியவாறே கை அசைத்தேன். அதை உணர்ந்தவராய், அவரும் 'அங்கேயே நில்' என்றவாறு கை அசைத்தார்.காரை அருகில் நிருத்தியவாறு, 'மன்னிக்கவும்...இந்த இடம் எனக்கு புதிது. கூகுல் வரைபடம் சரியான முகவரியை காட்டவில்லை' என்றார். நான் மனதுக்குள், 'I'm not the only one who is directionally challenged' என எண்ணிக்கொண்டேன். ஏதேதோ பேசி கொண்டே வந்தார். நானும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன்....எந்த தயக்கமும் இல்லாமல்.

அனைவரும் தீம் பார்க் சென்றோம். எனக்கு குழந்தைகளின் விளையாட்டுக்களில் விருப்பம் இல்லை. இவர் மட்டுமே அதை உணர்ந்தவராய், எனை மற்ற விளையாட்டுகளுக்கு அழைத்து சென்றார். திடீரென, உங்கள் வயது என்ன?உங்களை எவ்வாறு அழைக்க வேண்டும்? (அண்ணன் என அழைக்க சொல்லி விட கூடாதே என்ற கவலையுடன். இவ்வளவு அழகான வாலிபனை யார் தான் அப்படி அழைப்பார்கள்?) என கேட்டேன். என் வயது --, பெயர் ---, நீங்கள் பெயர் சொல்லி அழைக்கலாம் என்றார்.நாங்களே அறியாமல் (ஆனால், மற்றவர்களுக்கு எப்படியோ புரிய ஆரம்பித்து விட்டது) எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவாகி கொண்டு இருந்தது.

தீம் பார்க்விட்டு கிளம்பும் நேரம் நெருங்கியது. அனைவரும் விடை பெற்று கொண்டிருந்தனர். திடீரென, கனமழை பெய்ய தொடங்கியது. நாங்கள் இருவர் மட்டும் பார்க்கின் 'souvenir store' க்கு வெளியே நின்றிருந்தோம். உங்களுக்கு காபி வேண்டுமா? என்றார். நான் மழையை ரசித்தவாறு 'வேண்டாம்' என்றேன்.மழை எவ்வளவு அழகு....சுற்றியிருக்கும் சுமாரான விஷயங்களையும் மிக அற்புதமாக மாற்றுகிறது....மனம் பரவசத்தோடு சுகமான பாடல்களை பாடியது. கண்களை மூடி மழையின் சத்தத்தை ரசித்தேன். 'டீ' என்ற சத்தம் கேட்டு கண்களை திறந்தேன். 'ஒ , நன்றி' என்றவாறு டீயை வாங்கி கொண்டேன். எனக்கு என்ன தேவை என்பதை என்னை விட நன்கு அறிந்திருக்கிறார் என எண்ணி கொண்டேன். அருகில்....குழந்தைகள் சந்தோஷமாக சிரித்து கொண்டிருந்தனர். இந்த நிமிடம், உங்கள் உலகத்தை விட என்னுடையது மிக அழகு என பெருமை கொண்டேன்.

அப்பொழுது....பளீரென ஒரு மின்னல் 17-18 வயது மதிக்க தக்க ஒரு வாலிபன் தனது காதலை தோழியிடம் கூற, அவள் அவனை கட்டி அணைத்துக் கொண்டாள். அவன் அவளை வளைத்து இதழில் முத்தமிட்டான்....இருவரும் நெடு நேரம் மைகேல் அஞ்சேலோவின் சிற்பம் போல் நின்றனர். பலமுறை மின்னல் வெட்டியது...இருவரின் காதலையும் ஆராதிப்பதுபோல். 'Perfect moment' என்ற குரல் கேட்டு மெய்சிலிர்த்து அவரை பார்த்தேன். நான் நினைப்பதை அவர் அறிந்து விட்டாரோ? சிக்மன்ட் பிராய்டின் கருத்தை சந்தேகிக்க தொடங்கினேன்...
இது கனவா அல்லது நிஜமா?